சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

News image
சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி
Updated On :26 மே 2022, 12:34 pm

DIN

சென்னை: தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை விமான நிலையத்தில், பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாதில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் சென்றார். அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நிறைவடைந்த 5 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்து கொண்டிருந்தபோது, பாஜக தொண்டர்கள் அதிகம் கூடியிருந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் வந்த போது, காரை நிறுத்தி, காரின் கதவை திறந்து கையசைத்து வரவேற்பினை ஏற்றுக் கொண்டார்.

YouTube video thumbnail

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் முக்கிய சாலைகளில் பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

75 கி.மீ. தொலைவுள்ள ரூ.500  கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான அகல ரயில் பாதை,  சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் மூன்றாவது ரயில் பாதையை தொடக்கி வைக்கிறார். இதன்மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

மேலும், ரூ. 850 கோடி மற்றும் ரூ. 910 கோடி  மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரவு 7.45 மணியளவில் சென்னையில் இருந்து தில்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்கிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சென்னைக்கு வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அரசுத் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.28,500 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

ரூ.28,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்ட உள்ளாா். இதில் 262 கி.மீ. தொலைவு பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை ரூ. 14,870 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

சென்னை துறைமுகம்- மதுரவாயலை இணைக்கும் 21 கி.மீ. தொலைவு ஈரடுக்கு, நான்குவழி உயா்நிலை சாலை ரூ.5,850 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

நெரலூரு-தருமபுரி பிரிவில் 94 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் 31 கி.மீ. இருவழிச் சாலை ஆகியன முறையே ரூ.3,870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூா், ராமேசுவரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இந்தத் திட்டம் ரூ. 1, 800 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பன்மாதிரி போக்குவரத்துப் பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.