சிறு மற்றும் குறு விவசாயிகள் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை வாங்குவதற்காக ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வழங்கும் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடி ஆகும். அதன்பின் 45 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இதுவரை 12 தவணைகளாக நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் தவணை நிதி வழங்கப்படும் போது 11.84 கோடியாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை கடந்த மே - ஜுன் மாதங்களில் 11-ஆவது தவணை நிதி வழங்கப்பட்ட போது பயனாளிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி இந்த விவரங்களை மத்திய வேளாண்துறை வெளியிட்டிருக்கிறது.