சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 42,000 ஏரிகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கு நீர்வரும் பாதைகள், நீரைத் தேக்கிவைக்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 14,318 ஏரிகளை நீர்வளத் துறை நிர்வகித்து வருகிறது. அதில் 2,700 ஏரிகள் இந்த மழைக்கு முழுவதுமாக நிரம்பிவிட்டன. இந்தத் துறை அதிகாரிகள் கூறுகையில், மீதமிருக்கும் ஏரிகளிலும், நீர் தேக்கும் அளவானது ஆக்கிரமிப்பு மற்றும் போதுமான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஏரிகளின் நீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்த நிலையில்தான், அனைத்து ஏரிகளையும் ஆய்வு செய்து, விரைவாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு நீர் வளத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன். ஆனால், ஆவணங்களில் இருப்பது போன்ற நில அமைப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே, வருவாய்த் துறையிடம் மாநில அளவிலான தரவுகளை கேட்டிருக்கிறோம். கிடைத்ததும் நிலத்தை அடையாளம் காணும் பணிகள் தொடங்கிவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்.
நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட மற்றும் மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மாதந்தோறும் கூடி நடந்து வரும் வேலைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பது நல்ல பலனைத் தரும் என்றும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஏராளமான ஏரிகளில் நீரைத் தேக்கி அவற்றை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், பல ஆண்டுகளாக ஏரிகளை போதுமான அளவில் பராமரிக்காத காரணத்தால், அதற்கு வரும் நீர்வரத்தும் குறைந்துவிட்டது என்கிறார் விவசாயிகள்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தூர்வாரப்பட வேண்டும். இது தொடர்பாக பல முறை பல தரப்பினர் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. எனவே, தமிழக அரசு, நீர்நிலைகளைப் பராமரிக்க கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.