மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி சத்யப்பிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி சத்யப்பிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இக்கொலை வழக்கை ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இத் தம்பதியின் மகள் சத்யா (20). இவா் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23), சத்தியாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சத்தியா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அண்மையில் சதீஷ், சத்யாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சதீஷ், சத்யாவை வழிமறித்து தகராறு செய்துள்ளாா்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்தியாவை தள்ளிவிட்டாா். இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினாா். 

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயா் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். இது குறித்து பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவாக இருந்த சதீஷை துரைப்பாக்கம் அருகே காவல்துறையினர் கைது செய்தனர். 

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதீஷ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை அக்.28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com