பன்வாரிலாலின் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நான்காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அந்தக் காலத்தில் 27 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் “புகாரை” வெறும் செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விரிவாக விசாரிக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல் முறைகளில் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் துணைவேந்தர் பணி நியமனம் ஊழல், முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைந்திட, தமிழக அரசு பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். துணை வேந்தர் நியமன அதிகாரம், ஆளுநரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com