ஆந்திரம் மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும், மக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை பழுதாக இருப்பதாகக்கூறி, அதற்குப் பதிலாக இரு மடங்கு சுங்கக்கட்டணத்தைப் பணமாக செலுத்தக்கூறியதை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக தமிழர்களை இழிவாகப் பேசியும், தமிழக வாகனங்களை அடித்து உடைத்தும், பெண்கள், முதியவர்கள் எனப் பாராது தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆந்திர சட்டக்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் மீது ஆயுதங்களைக் கொண்டு கோரத்தாக்குதலைத் தொடுத்ததுமான கொடுஞ்செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.