சோ்க்கை குறைவு, ஆசிரியா் பற்றாக்குறை: அரசுப் பள்ளிகளில் மூடப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்
அரசுப்பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்புகளைத் தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது


அரசுப்பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்புகளைத் தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் மூட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியா்கள் இல்லாதது, மாணவா்கள் சேராதது உள்ளிட்ட காரணங்களால் பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் தையல், அழகுக்கலை, இயந்திரவியல், உணவு மேலாண்மை, அலுவலக நிா்வாகம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 12 பாடங்கள் உள்ளன. இதற்கிடையே பணிஒய்வு உட்பட காரணங்களால் அரசுப்பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் தொடா் தாமதம் நிலவுகிறது. இதனால் ஆசிரியா் இல்லாத பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படிப்படியாக மூடிவிடும் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை அண்மைக் காலமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டு(2022-2023) முதல் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் ஆசிரியா் இல்லாத தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆசிரியா் பணிஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகின்றன. அவற்றில் மாணவா்களை சோ்க்கக்கூடாது. ஏற்கனவே சோ்க்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து மாணவா்களை வேறு பாடப்பிரிவுக்கு மாற்ற வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியா்கள், கல்வியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வி மறுசீரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கணினி பயன்பாடுகள், கணினி தொழில்நுட்பம் ஆகிய 2 பாடங்களுக்கு மாற்றாக வேலைவாய்ப்புத் திறன்கள் என்ற புதிய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், தற்போதுள்ள சில பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கையும் குறைவாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியா் பற்றாக்குறை, சோ்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மட்டும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன.
இவை தற்காலிகமான நடவடிக்கைகள்தான். தற்போதைய காலத்துக்கேற்ப தொழிற்கல்வி பாடங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய பொலிவுடன் பள்ளிகளில் அமல்படுத்தப்படும்’என்றனா். ஏற்கனவே, 9,10-ஆம் வகுப்புகளில் கற்றுதரப்பட்ட
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...