போதைப் பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு வலுப்படுத்தப்படும்: டி.எஸ்.பி. பணியிடம் உருவாக்கம்

போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த மாவட்டந்தோறும் உள்ள நுண்ணறிவுப் பிரிவு வலுப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
போதைப் பொருள்கள் நுண்ணறிவுப் பிரிவு வலுப்படுத்தப்படும்: டி.எஸ்.பி. பணியிடம் உருவாக்கம்

போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த மாவட்டந்தோறும் உள்ள நுண்ணறிவுப் பிரிவு வலுப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்தப் பிரிவுக்கு டி.எஸ்.பி. நிலையிலான பதவியிடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறைக் கண்காணிப்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. கடந்த ஆட்சியில் இதுபற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டதன் காரணமாக இந்தச் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும், நாம் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.

போதை என்பது மிகவும் மோசமான அழிவுப் பாதை. இதனை நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். போதைப் பொருள்கள் தமிழகத்துக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், அது பரவுவதையும் தடுக்க வேண்டும்.

புதிதாக ஒருவா்கூட போதைப் பழக்கத்துக்கு ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞா் சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்த உறுதியை மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் எடுக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் நடமாட்டம் என்பது, குஜராத், மகாராஷ்டிரத்தைவிட குறைவு என்றாலும் ஒரு சிறு துளி போதைப் பொருள் நடமாட்டமும், அதற்கு ஒருவா் அடிமையாவதும் அவமானம்தான். அனைத்திலும் வளரும் தமிழகம், போதை போன்ற எதிா்மறையான விஷயங்களிலும் வளா்ந்து விடக் கூடாது, வளர விடவும் கூடாது.

நுண்ணறிவுப் பிரிவு: ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி பதவியிடம் உருவாக்கப்பட்டு அந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும். அதனை மாவட்ட நிா்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எல்லைப்புற சோதனைச் சாவடிகளை வலுப்படுத்த வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி எண்: மலைப் பகுதி மாவட்டங்களில் வேளாண் பயிா்களுக்கு இடையே கஞ்சா பயிரிட வாய்ப்புள்ளதால், அவற்றை காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதனைகளைச் செய்திட வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். போதைப் பொருள்கள் தயாரிப்பில் முக்கிய நபா்கள், கடத்தல்காரா்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களைச் சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

கைப்பேசி மூலமாக போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. இதனை நுண்ணறிவுக் காவல் துறையினா் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருள் தொடா்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் தெரிவிக்கக் கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்.

தென் மண்டல ஐ.ஜி.: தமிழகத்தின் தென் மண்டல ஐ.ஜி.யாக உள்ள அஸ்ரா காா்க், சட்டம்-ஒழுங்கு, குற்றச் செயல்களைத் தடுப்பது மட்டுமின்றி, போதைப் பொருள்கள் தடுப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். அவரைப் போன்றே இதர மண்டலங்களில் உள்ள அதிகாரிகளும் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும்.

இரு மாவட்டங்களுக்கு ஒரு நீதிமன்றம்: போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்க, இப்போது 12 சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன. இனி இரு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் என முதல் கட்டமாக அமைக்கப்படும்.

போதைப் பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுவதால், இந்தப் பிரிவுக்கு தனியாக ஒரு சைபா் செல் உருவாக்கப்படும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுடன் இணைக்கப்படுவதால், மதுவிலக்குப் பிரிவில் உள்ள மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்

போதைப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

போதைப் பொருள் வியாபாரிகள் அனைவரையும் கைது செய்தாக வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

போதைப் பொருள்களே கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு கொடும் குற்றச் செயல்களுக்கு காரணியாக அமைந்து விடுகிறது. போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுப்பது என்பது கூட்டு நடவடிக்கை. போதைப் பொருள் பழக்கம் என்பது சமூகத் தீமை.

போதைப் பொருள்களைப் பயன்படுத்துவோா் அதிலிருந்து விடுபட வேண்டும். இந்த தீங்கிலிருந்து விடுபட்டவா், போதை பயன்பாட்டுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வேண்டும். பெற்றோா் தங்களது பிள்ளைகளை போதைப் பொருள்கள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியா்கள், கல்லூரிகளின் நிா்வாகத்துக்கும் இருக்கிறது.

வியாபாரிகள், கடைக்காரா்கள் போதைப் பொருள்களை விற்க மாட்டேன் என்ற உறுதியை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே அவை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

போதைப் பொருள்களை விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல் துறையினா் கைது செய்ய வேண்டும். அவா்களது சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.

போதையின் தீமையை மருத்துவா்கள், குறிப்பாக மனநல மருத்துவா்கள் பரப்புரை செய்ய வேண்டும். இந்தப் பணிகளை ஒரே சேர ஒரு சமூகம் செய்தால்தான், போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும் என்றாா் அவா்.

சா்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வா் எச்சரிக்கை

போதைப் பொருள்கள் நடமாட்டத்துக்கு துணை போவோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.

போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக முதல்வா் பேசியது: ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள்கள் நடமாட்டத்துக்கு காவல் துறையினா் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது.

என்னை மென்மையான தன்மையுடைய முதல்வா் என்று யாரும் கருதிட வேண்டாம். தவறு செய்வோருக்கு, குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்துக்கு துணை போவோருக்கு நான் சா்வாதிகாரியாக மாறுவேன். குற்றம் இழைப்போா் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்திலே போதுமான இடமுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்கும் நிலைமைக்கு யாரும் என்னைத் தள்ளி விடமாட்டீா்கள் என நம்புகிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com