தமிழ்நாட்டில் 5 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திமுக அரசு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் 5 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 5 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


திமுக அரசு பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் 5 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதுபற்றிய முதல்வரின் அறிவிப்பு:

"திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்பதுதான் வாக்குறுதி. 

ஆனால், இந்த ஓராண்டில் 60 முதல் 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். இவையனைத்தையும் பட்டியலிடுவதற்கு காலம் நேரம் போதாது. நேரமில்லை.

எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும். இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை உள்ளது. அதற்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் இதன் உள்ளடக்கம்.

ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கும் இந்த மகிழ்ச்சிக்குரிய நாளில் மக்கள் மகிழும் சில அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன்.

சில மிக முக்கியமான 5 பெரும் திட்டங்களை வெளியிட மகிழ்ச்சியடைகிறேன்.

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

    இதனை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குவோம். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும்.
     
  • இரண்டாவது திட்டம் - ஊட்டச் சத்து இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.

    6 வயதுக்குள்பட்ட குழந்தைகளை நலமுடம் வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு, ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டச் சத்து திட்டம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பயனடைவார்கள்.
  • தகைசால் பள்ளிகள் என்ற திட்டம். கடந்த ஏப்ரலில் தில்லி சென்ற நான் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதற்கட்ட ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும். கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதே நேரத்தில் கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவின செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளிகளில் உருவாக்கப்படும். இந்த வகைப் பள்ளிகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

  • நான்காவது திட்டம், நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கக்கூடிய திட்டம். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல நகர்ப்புறங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் அமைய இருக்கின்றன.

    முதற்கட்டமாக சென்னைப் பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும்.

    இந்த மருத்துவ நிலையங்களுக்கு ரூ.180.45 கோடி செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். இந்த 708 காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும். இந்த நிலையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் ஏழைகள் இலவச மருத்துவ சேவை பெருவதை உறுதி செய்து 2030-க்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும்.

  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது.

    234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள். அடுத்து வரும் சில நிதியாண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்.

    ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தங்களுடைய தொகுதி மக்களின் தேவையை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். அந்தப் பட்டியலிலுள்ள மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களில் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அரசு முன்னெடுத்துள்ளது.

    இந்தப் பணிகளுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்தத் திட்டம் நேரடியாக என்னுடைய கண்காணிப்பில் நடைபெறப்போகிறது.

    எனது கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சி துணைத் தலைவரின் போடி தொகுதியாக இருந்தாலும் அனைத்து தொகுதிகளையும் சமமாக நடத்கப்படக்கூடிய திட்டங்கள் தீட்டப்படும் என உறுதியளிக்கிறேன்.

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டாம் ஆண்டு தொடங்கக்கூடிய இந்த நாளில் இத்தகைய 5 மாபெரும் திட்டங்களை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com