
சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெறும் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோரை வரவேற்றார் முதல்வர்.
இதன்பிறகு, அவர் பேசியதாவது:
நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பைத் தருகிறது என பிரதமர் மோடிக்கு தெரியும் என நம்புகிறேன். சிலவற்றை எடுத்து வைக்கவேண்டுமென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவிகிதமாகும். ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6%. மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவிகிதம். ஜவுளித்துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 19.4 சதவிகிதம், கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவிகிதம், தோல் பொருள்கள் உற்பத்திய்ல் 33 சதவிகிதம்.
இதையும் படிக்க | சென்னையில் நரேந்திர மோடி: ஒரே மேடையில் பிரதமர், முதல்வர்
ஆனால் ஒன்றிய அரசின் வருவாயில் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21% மட்டுமே. எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் பகிர்ந்தளிக்கும் பங்கிற்கேற்ப ஒன்றிய அரசின் திட்டங்களில் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான கூட்டாட்சியாக அமையும். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் முக்கியமானது.
அதிகளவிலான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும். இத்தகைய திட்டங்களை ஒன்றிய அரசு தொடங்கும்போது தொடக்கத்தில் அதிகமாக அளித்தாலும் காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து மாநில அரசு செலவிடவேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம். ஒன்றிய அரசின் பங்கானது திட்டம் முடியும்வரை தொடர வேண்டும். பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தும் திட்டங்களில் பயனாளிகள் தங்களது பங்கை செலுத்த முடியாதபோது ஒன்றிய-மாநில அரசுகள் இணைந்து அதனை சமமாக ஏற்க வேண்டும்.
இதையும் படிக்க | இதுதான் திராவிட மாடல்: பிரதமர் மோடிக்கு விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் கடலோர மீனவ மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டு அவர்களின் உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். தமிழ் மொழியை இந்திக்கு இணையாக மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை ஜூன் 2022க்குப் பிறகும் குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தர வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை எதிர்த்து சட்டம் இயற்றி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.