எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமானார்

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமானார்

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதியவர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். 

மறைந்த பா செயப்பிரகாசம் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதன் காரணமாக இந்தியா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் சமூக அக்கறை கொண்ட, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கிய எழுத்தாளர்களில் பா. செயப்பிரகாசம் ஒருவர். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1965-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர்.

1968 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை  இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

தினமணி, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தீராநதி, கதை சொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மன ஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. கவிதை,, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என பல அடங்கும்.

மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். 

ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில்  பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார்.  பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் பா செயப்பிரகாசத்துக்கு மணிமேகலை என்ற மனைவியும் தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவிலும், சாரு நிலா  அமெரிக்காவிலும் உள்ளனர்.

பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தான் வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளை 25 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயபிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com