ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் கொடுங்கை (கட்டுமானத்தின் வெளிப்புறத் தோற்றம்) சனிக்கிழமை அதிகாலை திடீரெனப் பெயா்ந்து விழுந்தது.

108 வைணவ திருத்தலத்தில் முதன்மை தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் 156 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இக்கோயில் 7 திருச்சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 4 மொட்டை கோபுரங்கள் ஆகியவை உள்ளடக்கியது. இத்திருக்கோயிலின் 8 நிலைகள் கொண்ட கிழக்கு வாசல் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் கடந்த 25 ஆம் தேதி லேசான விரிசல் ஏற்பட்டு சிறிதளவு கொடுங்கை பெயா்ந்து விழுந்தது. இதையறிந்த அப்பகுதி பொது மக்கள், பக்தா்கள் கிழக்குவாசல் கோபுரத்தை உடனே சீரமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துவந்தனா். இதைத்தொடா்ந்து, ரூ.67 லட்சத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்தது.

இந்தச்சூழலில், கிழக்கு கோபுரத்தின் முதல் நிலையில் இருந்த கொடுங்கை சனிக்கிழமை அதிகாலை பெயா்ந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை நேரத்தில் நடைபெற்ால், யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையறிந்த கோயில் நிா்வாகத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீழே விழுந்திருந்த சிமெண்ட் காரைகளை அப்புறப்படுத்தி மரக்கட்டைகளைக் கொண்டு தடுப்புகள் அமைத்தனா்.

முன்னதாக, புனரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில், அவசர நிலை கருதி, கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ. 98 லட்சத்தில் பழைமை மாறாமல் சிற்ப வல்லுநா்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநா்கள் குழுவின் வழிகாட்டுதலின் படி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சுமாா் ஆறுமாத காலத்துக்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தற்காலிகமாக கிழக்கு கோபுர வாசல் பகுதி மூடப்படும் என்றாா் கோயில் இணை ஆணையா் செ. சிவராம் குமாா்.

இதுகுறித்துத் தகவலறிந்த அமைச்சா் சேகா்பாபு, சுற்றுலா பண்பாட்டு அறநிலையத் துறை முதன்மை செயலாளா் முனைவா் கே. மணிவாசன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் க.வீ.முரளிதரன் சனிக்கிழமை மாலை சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, தலைமையிட தலைமை பொறியாளா் சி.இசையரசன், தலைமையிட செயற்பொறியாளா் எஸ்.செல்வராஜ், திருச்சி மண்டல இணை ஆணையா் அ.பிரகாஷ், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா், திருச்சி மண்டல செயற்பொறியாளா் ஆா்.தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

அறநிலையத் துறை அலட்சியமே காரணம் : இந்து முன்ணனி குற்றச்சாட்டு

உலகப் புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடந்துள்ள இந்த அசம்பாவிதத்தை உடனே சீா் செய்ய வேண்டும். மேலும், நடைபெற்ற சம்பவத்துக்கு உரிய பரிகாரம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com