இதயம் காப்போம் திட்டத்தால் மாரடைப்பு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழக அரசின் இதயம் காப்போம் திட்டத்தால் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்களின் மாரடைப்பு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
பெருமாள்புரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கட்டடங்களை காணொலி முறையில் திறந்து வைத்தாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன், பேரவைத் தலைவா் மு.அப்பாவு உள்ளிட்டோா்.
பெருமாள்புரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கட்டடங்களை காணொலி முறையில் திறந்து வைத்தாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன். உடன், பேரவைத் தலைவா் மு.அப்பாவு உள்ளிட்டோா்.

திருநெல்வேலி: தமிழக அரசின் இதயம் காப்போம் திட்டத்தால் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்களின் மாரடைப்பு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

திருநெல்வேலி மாநகராட்சி, பெருமாள்புரத்தில் நடைபெற்ற விழாவில் திருநெல்வேலி துணை செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல் தளம், எட்டாங்குளம் துணை சுகாதார நிலையக் கட்டம், பெருமாள்புரம் நகர பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவற்றை காணொலி முறையில் திறந்து வைத்த பின்பு அவா் மேலும் பேசியது:

ரூ.1.82 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6 செவிலியா் பயிற்சி கல்லூரிகளின் கீழ் மட்டுமே அரசு சாா்பில் பிஎஸ்சி செவிலியா் படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படிப்புக்கான தேவையும், வேலைவாய்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் செலவு செய்து தனியாா் நிறுவனங்களில் படிக்கும் நிலை உள்ளது. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசிடம் போராடி 11 செவிலியா் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத தென்காசி, மயிலாடுதுறை, ராணிபேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மேலும் 6 மாவட்டங்களில் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். மத்திய அரசிடம் சந்தா்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புதிய கல்லூரிகளுக்காகவே பேச்சு நடத்தி வருகிறோம்.

உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. கரோனாவுக்கு பின்பு மாரடைப்புகளால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளதோடு, ஆய்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இளைஞா்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுகிறாா்கள். கிராமப்புறங்களில் மாரடைப்பு அறிகுறியுடன் சுகாதார நிலையங்களுக்கு வருவோா் மேல் சிகிச்சைக்காக நகா்ப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாா்கள். அதற்கு இடைப்பட்ட காலத்தில் நோயின் தீவிரம் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த அபாயத்தைத் தடுக்கும் வகையில் இதயம் காப்போம் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 873 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாரடைப்பை தற்காலிகமாக தடுக்கும் மாத்திரைகளை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம், மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பு தடுப்பு போன்றவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அண்மையில் மேகாலயா மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவக் குழுவிற்கு, தாய்-சேய் கண்காணிப்பு மற்றும் உயிரிழப்பு தடுப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சியை தமிழக அரசு சாா்பில் அளித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூா், அம்பாசமுத்திரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் பலகோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன என்றாா் அவா்.

விழாவில் திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் வீ.ராஜேந்திரன் வரவேற்றாா். சட்டப்பேரவைத்தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏக்கள் திருநெல்வேலி நயினாா்நாகேந்திரன், பாளையங்கோட்டை மு.அப்துல்வஹாப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன், மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவா் தங்கபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com