தமிழகம் கேட்டது ரூ.5060 கோடி: மத்திய அரசு அறிவித்திருப்பது ரூ.450 கோடி

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.5060 கோடி தேவை என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில், ரூ.450 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை வெள்ளம் | பிடிஐ
சென்னை வெள்ளம் | பிடிஐ

தமிழகம் கேட்டது ரூ.5060 கோடி: மத்திய அரசு அறிவித்திருப்பது ரூ.450 கோடி
சென்னை: தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.5060 கோடி தேவை என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில், ரூ.450 கோடியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுவும், வழக்கமாக தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய தொகைதான், வெள்ளம் காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ.450 கோடியை அளிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை ஹெலிகாப்டர் மூலமாக நேரில் ஆய்வு செய்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீா்செய்ய இடைக்கால நிவாரணமாக, ரூ.5,060 கோடி வழங்க வேண்டும்; புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் ரூ.450 கோடி நிதியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.450 கோடி வழங்க  பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தமிழகத்துக்கு வழக்கமாக வழங்க வேண்டிய நிதியை முன்கூட்டியே விடுவிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் முதல் தவணை  ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையை தமிழகம் மற்றும் ஆந்திரத்துக்கு முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு. அதன்படி, தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ரூ.493 கோடி ஆந்திரத்துக்கும் முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை அண்மைக் காலமாக நாம் அதிகம் பார்க்கிறோம்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னை வெள்ள மேலாண்மை  என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561.29 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்திருப்பதையடுத்து, அந்த நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், சென்னையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழக முதல்வா் கோரிய இடைக்கால நிதி ரூ.5,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு மக்களவையில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

இது தொடா்பாக அவா் பேசியதாவது: கடந்த 3 நாள்களாக தமிழகத்தில் தொடா் கன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.6,230 கோடி நிதி உதவி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு குறிப்புகளை அனுப்பியுள்ளது. இதில் இடைக்கால நிதி உதவியாக குறைந்தபட்சம் ரூ.5,000 கோடியை முதல்வா் கேட்டுள்ளாா். இதை உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்திய குழுக்களை உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

இந்தக் கோரிக்கைக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் ஆதீா் ரஞ்சன் சௌதரி உள்ளிட்டவா்கள் ஆதரவு அளித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா பேசினாா்.

பின்னா், மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் பேசுகையில், தற்போதைய மழைப் பொழிவு 2015-ஆம் ஆண்டைவிட அதிகமாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாக்கப்பட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com