சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக,  சென்னையிலிருந்து  சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை : சபரிமலை ஐயப்பன் கோயில், மண்டல பூஜைக்காக நவம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது.  

சபரிமலை தேசிய யாத்திரை தலமாக இருப்பதால், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். கடந்த மண்டல சீசனின் ஆரம்ப நாள்களில் நாளொன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றனர். ஆனால் நடப்பு சீசனின் 4 நாள்களிலேயே 88 ஆயிரத்தைத் தாண்டி பக்தர்கள் வருகின்றனர். தினசரி 1.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னையிலிருந்து கேரளத்தின் கோட்டயம் வரை வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண்: 06151, சென்னை சென்ட்ரல்- கோட்டயம் வந்தே பாரத் சபரி சிறப்பு ரயில், வாரம் இரண்டு நாள்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய  தேதிகளில் சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, இம்மாதம் 16, 18, 23 மற்றும் 25 ஆகிய  தேதிகளில் கோட்டயத்திலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில்(06151), அன்றைய நாளில்  மாலை 4.15 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, கோட்டயத்திலிருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில்(06152), அன்றைய நாளில் மாலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com