சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்: முதல்வரிடம் ராமதாஸ் கடிதம்!

தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க மாநில அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கடிதம
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்: முதல்வரிடம் ராமதாஸ் கடிதம்!


சென்னை: தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க மாநில அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

அந்த கடிதத்தில், சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், சமூகநீதியை பாதுகாப்பதற்காக  அவசரமாகவும், அவசியமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதல்வராகிய தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு கால கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881-ஆம் ஆண்டில் தொடங்கி 1931 -ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாளில் தொடங்கி 43 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். அதன்பிறகு  1989, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.

இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இணையாக சமூகநீதியை பாதுகாக்கும் மாநிலங்களில் ஒன்றான  பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் காந்தியடிகளின் பிறந்தநாளான கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சராகிய தாங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையையே எடுத்து வந்திருக்கிறீர்கள்.  அத்தகைய கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என்று எண்ணி காத்திருப்பதா? தமிழ்நாடு அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதா? என்பது தான் நமக்கு இடையே உள்ள மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகள் ஆகும்.

சமூகநீதியைக் காக்க இந்தியா முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். தேசிய அளவில்  கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதை பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கிறது. அதற்கான பல்வேறு தருணங்களில் பாமக. குரல் கொடுத்திருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்படி பா.ம.க. வலியுறுத்துகிறது.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமருக்கு தாங்கள் கடிதம் எழுதி 70 நாட்களாகி விட்ட நிலையில், அது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை. அதேநேரத்தில், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். அதனால் தான், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை கடந்த காலங்களில் இருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சமூகநீதி சிறப்புகளில் முதன்மையானது 69 சதவிகித இட ஒதுக்கீடு ஆகும். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘69 சதவிகித இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை.

பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் அளவு 70 விழுக்காட்டை கடந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.   இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  மக்கள்தொகையை சாதிவாரியாக கணக்கிட வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

நாடாளுமன்றத்தில் 2008 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே அதன் பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும். சுமார் ஒரு மாத அவகாசத்தில்  ரூ.300 கோடி செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மிக எளிதாக நடத்த முடியும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடக்கூடாது என்று கடந்த அக்டோபர் 7-ஆம் நாள் தொடரப்பட்ட புதிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், இன்றைய சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகள் இல்லை.

எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர  வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com