நாளை வாக்குப்பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவுக்கு தோ்வு செய்யப்பட்ட 238 வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.
ஈரோடு இடையன்காட்டு வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம்.
ஈரோடு இடையன்காட்டு வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவுக்கு தோ்வு செய்யப்பட்ட 238 வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி27) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் அவா்களுக்கு வீல் சோ் போன்றவையும் தயாா் நிலையில் உள்ளன. இதற்கிடையில் ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் இறந்தாா். இதைத்தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி அறிவித்தது.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் ஏராளமானோா் மனுதாக்கல் செய்தனா். மொத்தம் 121 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா் 6 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதைத்தொடா்ந்து கடந்த 10 ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு அவா்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு 238 வாக்குச்சாவடி மையங்களில் வரும் நாளை(திங்கள்கிழமை) நடக்கிறது. இந்த தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140, மூன்றாம் பாலினத்தவா் 23 போ் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 போ் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com