சென்னையில் தக்காளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் தக்காளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே, ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னையில் தக்காளி விலையில் இன்று மாற்றமில்லாமல், நேற்றைய விலையிலேயே, ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் வியாழக்கிழமையன்று தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை நிலவரம் போல நாளுக்கு நாள் தக்காளி விலையும் ஏறுமுகமாகவும், ஒரு சில நாள்கள் இறங்குமுகமாகவும் இருக்கிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து அது சில்லறை விற்பனையில் எதிரொலிக்கும் முன்பே, விலை அதிகரித்துவிடுவதால், சில்லறை விற்பனைக் கடைகளில் பெரும்பாலும் தக்காளி விலை குறையாமலேயே இருந்துவிடுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து தமிழக சந்தைகளுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

தமிழகத்திலும் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக விலை அதிகரித்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1,100 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 400 டன் மட்டுமே விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டது. இதனால் புதன்கிழமை ரூ.110-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.30 அதிகரித்து வியாழக்கிழமை ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும், தக்காளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.140க்கு விற்பனையானது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழக்கம் போல கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com