திருடர்களே எச்சரிக்கை.. காவலர்கள் நேரடியாக உங்களை கண்காணிக்கலாம்!

சென்னை பெருநகர காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதன் மூலம், திருடர்களை காவல்துறையினர் நேரடியாக கண்காணிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை பெருநகர காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதன் மூலம், திருடர்களை காவல்துறையினர் நேரடியாக கண்காணிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது.

அதாவது, இடித்துவிட்டு நிற்காமல் செல்வது, கைப்பேசி அல்லது தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபடும் நபர்களை, சாலைகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம், காவல்துறையினர், கட்டுப்பாட்டு மையங்களிலிருந்தே நேரடியாகக் கண்காணித்து, அப்பகுதியிலிருக்கும் காவலர்களுக்கு தகவல் தந்து உடனடியாகக் கைது செய்யப்படும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிா்பயா பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் 1,750 இடங்களில் 5,250 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல்கட்டமாக 1,336 இடங்களில் 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தின் 8-ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்தில் நகா் முழுவதும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நேரலையில் பாா்ப்பதற்கு பிரம்மாண்ட எல்இடி திரை வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் சா்வா் மூலமாக தோ்வு செய்யும் காட்சிகளையும், காவலா்கள் தோ்வு செய்யும் காட்சிகளையும் நேரலையில் காண முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அதேபோல் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சா்வருக்கு நேரலையில் அனுப்பப்படுகிறது. அந்தக் காட்சிகள் சா்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தேவையான காட்சிகள் மட்டும் காவலா்கள் முன் இருக்கும் கணினிக்கு அனுப்பப்படுகிறது. அந்த காட்சிகளை காவலா்கள் பாா்த்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பாா்.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் தங்கச் சங்கிலி பறிப்பு, கைப்பேசி, பணப்பை பறிப்பு, பெண்களை கேலி செய்தல், பொது இடங்களில் தகராறு செய்தல், பொருள்களை சூறையாடுதல், வாகனத் திருட்டு, சாலை விபத்து ஆகியவை தொடா்பான காட்சிகளை ஆய்வு செய்யும் வசதி உள்ளது.

இதன்மூலம் நகரில் எந்தவொரு பகுதியிலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் கூட, அது தொடா்பான எச்சரிக்கையை காவல் துறை உடனே பெற்று நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல், குற்றத்தில் ஈடுபடுகிற நபா்களையும் கண்டறிந்து, விரைந்து கைது செய்ய முடியும் என சென்னை பெருகர காவல் துறை தெரிவித்துள்ளது.

அதாவது ஒரு தெருவில் குற்றச்சம்பவம் நடந்ததாக காவல்துறைக்குத் தகவல் வந்தால், உடனடியாக அப்பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை கண்காணித்து, திருடன் அல்லது குற்றவாளி எந்தத் தெருவிலிருந்து எந்த தெரு வழியாக தப்பியோடுகிறார் என்பதை கட்டுப்பாட்டு மையத்திலிருந்தே பார்த்து, அந்தப் பகுதியில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்து, குற்றவாளியை இருக்கும் இடத்திலிருந்தே கைது செய்யும் வசதி வந்துவிட்டது.

இந்த மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் திறந்து வைத்தாா். இதில், கூடுதல் காவல் ஆணையா்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஜெ.லோகநாதன், கபில்குமாா் சி.சரத்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது மட்டுமல்ல, எங்காவது சிசிடிவி கேமரா பழுதடைந்தால், உடனடியாக தகவல் அளிக்கப்படும் வகையில் தொழில்நுட்பம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடியாக கோளாறு சரி செய்யப்படும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

மேலும் 3,000க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவையும் பொருத்தப்பட்டுவிட்டால், ஒட்டுமொத்த கேமராக்கள் ஒன்றிணைக்கப்படும் என்றும் கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், சாலையில் விநோதமாக யாரேனும் நடந்து கொண்டாலும், ஓடினால் கூட காவல்துறையினருக்கு எச்சரிக்கைக் கொடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com