/

திருப்பூர் ரயில்வே காவல்நிலையம் முன்பு திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

பிகார் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

திருப்பூரில் உள்ள ரயில்வே காவல் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள்.

Updated On :3 மார்ச் 2023, 6:17 pm IST

திருப்பூர்: பிகார் மாநில தொழிலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, திருப்பூர் காவல்நிலையம் முன்பு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மீட்டனர். 

அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி ரயில்வே காவல் நிலையம் முன்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திரண்டனர்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (37), இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, பின்னலாடைகளுக்கு அழுக்கு எடுக்கும்(ஸ்டெயின் ரிமூவர்)கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார். 

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதையடுத்து, நடத்திய விசாரணையில் சஞ்சீவ்குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக்குப்தா ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

இதில், சஞ்சீவ் குமார் ரயில் நிலையத்துக்கு வருவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், தண்டவாளத்தைக் கடக்கும்போது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.  

காவல் நிலையம் முன்பாக திரண்ட தொழிலாளர்கள்
முன்னதாக சஞ்சீவ்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரயில்வே காவல் நிலையம் முன்பாகத் திரண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.