அதிகரிக்கும் கோடை வெப்பம் மிகவும் ஆபத்தானது. இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும்.