மாசி மகத் திருவிழா: காஞ்சிபுரம் அருகே ஒரே இடத்தில் 16 கிராமத்தின் சுவாமிகள்!

மாசி மகத் திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் அருகே மானாம்பதி கிராம கூட்டுச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில்16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்றாக இணைந்து நிற்கும் போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மானாம்பதி கூட்டு சாலையில் ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு காட்சியளித்த 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள்.
மானாம்பதி கூட்டு சாலையில் ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு காட்சியளித்த 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள்.

காஞ்சிபுரம்: மாசி மகத் திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் அருகே மானாம்பதி கிராம கூட்டுச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில்16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்றாக இணைந்து நிற்கும் போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மானாம்பதியில் கி.பி.1020 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழரால் கட்டப்பட்ட பழமையான கோயில் பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீவானசுந்தரேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் நடைபெறும் மாசி மகத் திருவிழா நாளன்று 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்றாக மானாம்பதி கூட்டுச் சாலையில் சந்தித்து ஒன்றாக நிற்கும் போது சிறப்பு தீபாராதனைகள் நடந்து வருவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக திங்கள்கிழமை மாசி மகத் திருவிழாவையொட்டி இக்கோயிலிலிருந்து மனோன்மேனி சமேத சந்திரசேகர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மானாம்பதி கூட்டுச் சாலையில் எழுந்தருளினார். பின்னர் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களான பெருநகர், இளநகர், விசூர், தேத்துறை, தண்டரை, மானாம்பதி, சேப்பாக்கம், குறும்பூர், மேல்மா, நெடுங்கல், அதிதி, சேத்துப்பட்டு, இளநீர்க்குப்பம், கீழ்நீர்க்குன்றம், அகத்தியப்ப நகர், நெடுங்கல்புதூர் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகளும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி மானாம்பதி கூட்டுச்சாலை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அனைத்து தெய்வங்களும் அணிவகுத்து ஒன்றாக நின்ற போது ஒரே நேரத்தில் தெய்வங்கள் அனைத்துக்கும் அந்தந்த கோயில் பூஜகர்கள் சிறப்பு தீபாராதனை காண்பித்தனர். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

16 கிராமங்கள் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து அனைத்து தெய்வங்களும் ஒவ்வொன்றாக கலைந்து அந்தந்த சந்நிதிகளுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை மானாம்பதி ஸ்ரீவானசுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு, ஆண்டவ விநாயகர் கோயில் தெரு மற்றும் மேட்டுத்தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com