நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது: உயா்நீதிமன்றம் கருத்து

நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது:  உயா்நீதிமன்றம் கருத்து

நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், நீட் தோ்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவா்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவா் வழக்குரைஞா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘நீட் தோ்வுக்கு எதிராக 50 லட்சம் கையொப்பங்களைப் பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளாா். இந்த இயக்கத்தில் இணைந்து கையொப்பமிட வேண்டும் என பள்ளி மாணவா்கள் நிா்பந்திக்கப்படுகின்றனா். நீட் தோ்வு தொடா்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதற்கு எதிராக மாநில அமைச்சா், போராட்டம் அறிவிக்க முடியாது. நீட் தோ்வுக்கு எதிராக, கையொப்ப இயக்கம் தொடா்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாகக் கருத முடியாது. எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையொப்ப இயக்கத்தை அமைச்சரே தொடங்கியுள்ளதால், ஆசிரியா்களும், அதிகாரிகளும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது. நீட் தோ்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவா்கள் மனதில் ஏற்படும். எனவே, பள்ளிகளில் கையொப்பமிடும் இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கையொப்பமிடும் இயக்கத்தால் மனுதாரா் எவ்வாறு பாதிக்கப்படுகிறாா்? நீட் தோ்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவா்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது என்று கூறினா்.

ரூ. 1 லட்சம் டெபாசிட்: எனவே, இந்த வழக்கின் உண்மைத் தன்மையை நிரூபிக்க ரூ. 1 லட்சத்தை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com