தீபாவளி: 60 சிறப்பு ரயில்கள்; நெல்லைக்கு நவ.9-இல் கூடுதலாக 'வந்தே பாரத்'

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி: 60 சிறப்பு ரயில்கள்; நெல்லைக்கு நவ.9-இல் கூடுதலாக 'வந்தே பாரத்'

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முக்கிய வழித்தடங்களில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில் சென்னை - நாகர்கோவில் இடையே 11 ரயில்களும், திருநெல்வேலி இடையே 8 ரயில்களும், கொச்சுவேலி - பெங்களூர் இடையே 4 ரயில்களும், சென்னை - சந்தரகாச்சி, புவனேஸ்வர், மங்களூர் இடையே தலா 6 ரயில்கள் உள்பட 60 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்து தெற்கு ரயில்வேக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களிடையே இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து நவ.10, 17, 24 தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். பின் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து நவ.12, 19, 26 தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.

வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னையிலிருந்து நெல்லைக்கு ஏற்கெனவே வந்தே பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை (நவ.9) கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படும்.

எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 06067) பிற்பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடை யும். மறுமார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 06068) இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சிறப்பு ரயில்கள்

திருநெல்வேலி சென்னை எழும்பூர் இடையே நவ.9, 16, 23 தேதிகளிலும், மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே நவ.10, 17, 24 தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06070/06069) இயக்கப்படவுள்ளன.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிரம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து மாலை 6.45-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30-மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். நாகர்கோவில் பெங்களூர் இடையே நவ.7, 14, 21 தேதிகளிலும், மறுமார்க்கமாக பெங்களூர் - நாகர்கோவில் இடையே நவ. 8, 15, 22 தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06083/06084) இயக்கப்படவுள்ளன. இந்த ரயில் திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com