இந்தியா-கனடா இடையே விசா சேவைகள் ஏன் நிறுத்தப்பட்டன?

கனடாவில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வியாழக்கிழமை(அக்.26) முதல் மீண்டும் (நுழைவு இசைவு) விசா சேவைகளை தொடங்கியுள்ளது. 
இந்தியா-கனடா இடையே விசா சேவைகள் ஏன் நிறுத்தப்பட்டன?


ஒட்டவா: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வியாழக்கிழமை(அக்.26) முதல் மீண்டும் (நுழைவு இசைவு) விசா சேவைகளை தொடங்கியுள்ளது. 

கடந்த ஜூன் 18-ஆம் தேதி  கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடா்புள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டிய நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா உத்தரவிட்டது. இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயா் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்ததுடன் கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால்" கனடாவின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது  உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகளை எடுத்தது. ‘கூடுதலாக உள்ள 41 தூதரக அதிகாரிகளை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியா கெடு விதித்தது. இதனைத் தொடா்ந்து இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த -20 ஆம் தேதி இந்தியாவில் உள்ள மூன்று துணைத் தூதரகங்களில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலி தெரிவித்தார். 

இந்தியாவில் பணியமா்த்தப்பட்டுள்ள கனடா தூதரக அதிகாரிகளில் தில்லியில் உள்ள 21 தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைத் தவிர, பிற கனடா தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வெள்ளிக்கிழமையுடன் ரத்து செய்யப்படும் என இந்தியா முறைப்படி தெரிவித்தது. 

இந்த நடவடிக்கை காரணமாக, இவா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும் என்ற அடிப்படையில், இந்தியாவில் கூடுதலாக பணியமா்த்தப்பட்டிருந்த 41 தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் 42 பேரையும் கனடா திரும்பப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, சண்டீகா், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் செயல்பட்டு வந்த கனடா துணைத் தூதரகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் எஞ்சியிருக்கும் கனடா நாட்டைச் சோ்ந்தவா்கள், தங்களுக்கான சேவைகளுக்கு தில்லியில் உள்ள தூதரகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மிகுந்த கவனமாக இருக்குமாறும் அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா். 

மேலும், இந்தியாவின் நடவடிக்கை சா்வதேச சட்டங்களுக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கை. தூதரக உறவுகள் தொடா்பான வியன்னா உடன்பாட்டையும் மீறிய நடவடிக்கையாகும் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தியா மறுப்பு
தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப் பெற அறிவுறுத்தியது சா்வதேச விதிகளுக்கு எதிரானது என கனடா தெரிவித்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

‘தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்பப் பெற்றதை சா்வதேச விதிகளுக்கு எதிரானது போன்று சித்தரிக்க கனடா முயற்சிக்கிறது. இரு நாடுகளிடையே தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையில் சமநிலையைக் கடைப்பிடிப்பது என்பது தூதரக உறவு தொடா்பான வியன்னா உடன்பாட்டு நடைமுறைகளுக்கு முழுமையாக உடன்பட்டதாகும்.

எனவே, அதை சா்வதேச விதிகளுக்கு எதிரானது போன்று சித்தரிக்க கனடா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா மறுக்கிறது’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

விசா சேவைகள் இந்தியா மீண்டும் தொடங்கும்
இந்நிலையில், இந்த பிரச்னை தொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தற்போது இந்தியா-கனடா இடையிலான உறவு கடினமான கட்டத்தில் உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் தென்பட்டால், அந்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு நுழைவு இசைவு வழங்கும் பணிகளை இந்தியா மீண்டும் தொடங்கும்.

இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் பொருத்தவரை, ராஜீய உறவுகளில் வியன்னா உடன்படிக்கை சமத்துவ உரிமையை அளிக்கிறது.

இந்திய விவகாரங்களில் கனடா அதிகாரிகளின் தலையிட்டதைக் கருத்தில் கொண்டு, அந்த சமத்துவ உரிமையை இந்தியா பயன்படுத்தியது.

தற்போது உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் நிகழ்வின் (இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்) தொடா் விளைவுகளை தற்போது அனுமானிக்க இயலாது.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் பரவுவதன் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இனி எந்தவொரு ஆபத்தும் தொலைவில் இருப்பதாகக் கருத முடியாது என்று தெரிவித்திருந்தார். 

மீண்டும் விசா சேவைகள்
இதையடுத்து கனடாவில் குறிப்பிட்ட விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களில் கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கு வியாழக்கிழமை(அக்.26) முதல் நுழைவு இசைவு விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வா்த்தக நுழைவு இசைவு, மருத்துவ நுழைவு இசைவு, மாநாடு நுழைவு இசைவு மற்றும் முக்கிய கூட்டங்களுக்குச் செல்லும் வகையில் மாநாட்டு நுழைவு இசைவு உள்ளிட்ட நுழைவு இசைவு விசாக்கள் மட்டும் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com