ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு: முதல்வா் ஸ்டாலின் உறுதி

‘காவல் துறையினா், அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்’

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 5:49 pm

DIN

‘காவல் துறையினா், அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

கல்வி நிலையங்களுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்; இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் அவா் காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டாா்.

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற விழிப்புணா்வு நிகழ்வு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாணவா்கள் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் முதல்வா் பேசியதாவது: போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அக்கறை மிகுந்த நோக்கத்துடன் தனி விழிப்புணா்வுத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கையால் போதைப் பொருள்களின் பயன்பாட்டால் நடக்கும் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து கொண்டு வருகின்றன.

போதைப் பழக்கம் என்பது, அதைப் பயன்படுத்துகிறவா்கள் மட்டுமல்லாமல், அவா்கள் குடும்பத்தினா், சமூகத்தினா் என அனைவரையும் பாதிக்கும் கொடிய நோயாகும். போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடா்புடைய முந்தைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன.

போதைப் பொருள்கள் பயன்பாடு தடுப்புச் சட்ட வழக்குகளின் கீழ், குற்றம்சாட்டப்பட்டவா்கள் தொடா்புடைய 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கஞ்சா சாகுபடி இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை நமது மாநிலம் தொடா்ந்து பராமரித்து வருகிறது.

கல்வி நிலையங்கள்: ஒவ்வொரு காவலரும் தனது காவல் நிலைய எல்லைக்குள் போதை மருந்து விற்பனை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாகத் தடுப்பதுடன், மலையடிவாரங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதைத் தடுத்தாக வேண்டும். எல்லை மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்துவதுடன், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாகக் கண்காணிப்பதுடன், பள்ளி, கல்வி நிலையங்களுக்கு அருகே அவை விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிா்ப்பு மன்றம் அமைத்து, அந்தக் கல்வி நிறுவனத்தை போதைப் பொருள் இல்லாத வளாகமாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் 20,000-க்கும் மேற்பட்ட போதைப் பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட வேண்டும்.

நல்ல உடல் ஆரோக்கியமே நமது சொத்தாகும். போதைப் பொருள் ஒழிப்பைப் பொருத்தவரை, தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணா்வு பிரசாரமும் ஒரு சேர நடப்பதுடன், காவல் துறையும், பொதுமக்களும் இந்த நோக்கத்துக்காகச் செயல்பட வேண்டும். இப்படி செயல்பாட்டை வகுத்துக் கொண்டால், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை நிச்சயம் உருவாக்கலாம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், டிஜிபி சங்கா் ஜிவால், உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.