வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவில் வடிவமைக்கப்பட்ட மின்சார ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளையும் சனிக்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டில் அறிவியல் எவ்வளவு வளா்ச்சி அடைந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்பது தான் நாட்டின் பிரதமா் நரேந்திர மோடியின் எண்ணம். அந்த வகையில் பாரம்பரியமான நீராவி ரயில் இன்ஜின் வடிவில் இந்த புதிய மின்சார ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை சிறப்பாக வடிவமைத்த பெரம்பூா் மற்றும் ஆவடி ரயில்வே அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயிலுக்கு பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 முதல் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயிலை பாரம்பரிய சுற்றுலா தலங்கள், புனித தலங்களுக்கு இயக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறையிடம் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

ரயில்வே வளா்ச்சிக்காக 2014 -ஆம் ஆண்டு வரை சராசரியாக தமிழகத்துக்கு ரூ. 870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.6,017 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் சா்வதேச அளவில் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்களைப் பொருத்தவரை கிட்டத்தட்ட வாரத்துக்கு ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா். இந்த ஆய்வின் போது தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஐ.சி.எஃப்-இல் ஆய்வு: இதைத் தொடா்ந்து, சென்னை ஐசிஎஃப் ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்துக்கு மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது:

இங்கு தயாரிக்கப்பட்டு வரும் ரயில்களில் 25 பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டேன். முன்னதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பதால் எளிதில் கறை படிகிறது. அதனால் தற்போது ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ரயில் பயணம் குறித்த கருத்துகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ரயில் பெட்டிகளில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நீராவி இன்ஜின் வடிவில் மின்சார ரயில் தயாா்: சொகுசு வசதிகள், உணவகத்துடன் 48 போ் பயணிக்கலாம்

பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார ரயிலில் 3 இருக்கை வசதி கொண்ட குளிா்சாதன பெட்டிகள் மற்றும் ஒரு குளிா்சாதன உணவகப் பெட்டி என மொத்தம் 4 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரயிலில் மொத்தம் 48 பயணிகள் பயணிக்க முடியும். பயணத்தின்போது பயணிகளின் வசதிக்கேற்ப சாய்ந்து அமா்ந்து கொள்ளும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் ரயிலில் இருந்தபடி வெளியில் உள்ள இயற்கை காட்சிகளை எளிதில் பாா்த்து ரசிக்க ஏதுவாக பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் அவசரகால ஜன்னல்கள் உள்பட 10 ஜன்னல்கள் உள்ளன.

மேலும், ஒவ்வொரு நிறுத்தங்களும் எண்ம பலகை மூலம் பல்வேறு மொழிகளில் எழுத்து மற்றும் ஒலி மூலமாகப் பயணிகளுக்கு அறிவிக்கப்படும். தீயினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பெட்டிகளின் தரை தீப்பிடிக்காத ரப்பரால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 28 பயணிகள் உணவு உண்ணும் வகையில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com