சிறைக் கைதி தப்பிச்சென்றது இதுவே முதல் முறை

சிறைக் கைதி தப்பிச்சென்றது இதுவே முதல் முறை

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போக்சோ குற்றவாளி தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக, சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போக்சோ குற்றவாளி தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கோவை மத்திய சிறைச்சாலையின் மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 32 வயதான போக்சோ குற்றவாளியையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த விஜயரத்தினம்,  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் உள்பட 20 சிறைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதலை பெட்ரோல் நிலையத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருந்தன.

இந்தியன் ஆயில் நிறுவனமும், தமிழகத்தின் சிறைத் துறையும் இணைந்து இந்த பெட்ரோல்நிலைய திட்டத்தை 2018 முதல் செயல்படுத்தி வருகிறது. இங்கு பணியாற்றும் கைதிகளை, சிறைத் துறை காவலர்கள் கண்காணித்து, பணி முடிந்ததும் சிறைக்கு அழைத்து வருவார்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ.6,000 ஊதியம் வழங்கப்படும்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நேரப் பணியில் விஜயரத்னம் உள்பட 8 பேர் இருந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களை அழைத்துச் செல்ல சிறை வாகனம் வந்தபோது விஜயரத்தினம் இல்லை என்பது தெரிய வந்தது.

இது குறித்து உடன் வேலை செய்த சிறைக்கைதிகள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கண்காணிப்புப் பணியில் இருந்த மூன்று சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சிறைக் கைதிகள் பணியாற்றும் விடுதலை பெட்ரோல் நிலையங்களில் 24 மணி நேர கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக..

இந்த திட்டம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பச் சூழல், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்த பிறகு சிறைக் கைதிகள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை கழித்த பிறகே இப்பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களது ஊதியம், அவர்களது குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சிறைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com