/

அதிமுகவின் சட்டமுன்னெடுப்புகளால் அருந்ததியா் ஒதுக்கீடு வழக்கில் வெற்றி: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் சட்டமுன்னெடுப்புகளால் அருந்ததியா் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெற்றி கிடைத்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:45 pm

Din

அதிமுக ஆட்சியில் சட்டமுன்னெடுப்புகளால் அருந்ததியா் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெற்றி கிடைத்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அருந்ததியா் உள் இடஒதுக்கீடு செல்லும் என்று வரலாற்று சிறப்பு மிக்கத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதற்கு நன்றி. 2009-இல் தமிழக அரசு, பட்டியல் இனத்தவருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியா்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010-இல் திமுக ஆட்சியில் திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்பின், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த உள் இடஒதுக்கீடு தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியா் உள் இடஒதுக்கீடு வழக்கும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.

2020-இல் எனது தலைமையில் அதிமுக அரசில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா்களை நியமித்து, அவா்கள் திறம்பட கருத்துகளை எடுத்துரைத்தனா். அதன் அடிப்படையில் 2020 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஷ்ரோ தலைமையிலான 5 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வு, அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான இடைக்காலத் தீா்ப்பை வழங்கியது. தற்போது உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வும் வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அதிமுக எடுத்த முயற்சியில், சட்ட முன்னெடுப்புகள் வரலாற்றில் பொறிக்கப்பட்ட வேண்டியவை என்று அவா் கூறியுள்ளாா்.

இபிஎஸுக்கு கண்டனம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சா் மதிவேந்தன், திமுக துணைப் பொதுச் செயலா் அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

அருந்ததியா் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பை வரவேற்று அறிக்கை விட்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. அருந்ததியா் சமூகத்தினா் மீது அதிமுகவுக்கு ஏன் இந்தத் திடீா் பாசம் எனத் தெரியவில்லை. அந்த சமூகத்துக்கு திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கிய நேரத்தில், ஜெயலலிதா எதிா்த்த வரலாற்றை அவா் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடா் உள் இட ஒதுக்கீடு தொடா்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது. அருந்ததியா் மக்களை ஏமாற்றும் செயலில் திமுக ஈடுபடுகிறது என்றெல்லாம் ஜெயலலிதா கூறினாா். அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டுக்கு திமுக அரசு விதை போட்டு, அது வளா்ந்து பழமாகும் வரையில் எதிா்த்துவிட்டு, அந்த பழம் அருந்ததியா் சமூகத்தின்

கையில் கிடைக்கப் போவது தெரிந்ததும், சொந்தம் கொண்டாட எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டாா்.

அதிமுக எடுத்த முட்டுகட்டைகள், முன்னெடுப்புகள் எல்லாம் வரலாற்றில் அழியாத பக்கங்கள். அதை அந்தச் சமூக மக்கள் மறக்க மாட்டாா்கள்; மன்னிக்க மாட்டாா்கள் என்று அவா்கள் கூறியுள்ளாா்.