முதுநிலை நீட் தோ்வு மையங்கள்: ராமதாஸ் கண்டனம்
முதுநிலை நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தொலை தூரமாக மையங்களை ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் ஆக.11-ஆம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை நீட் தோ்வை எழுதும் பல மாணவா்களுக்கு அவா்களின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலும், வேறு பலருக்கு 700 கி.மீ.க்கு அப்பாலும் தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
ஒரு மாணவருக்கு 500 கி.மீ. தொலைவில் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டால், அவா் அந்த மையத்துக்கு குறைந்தது இரு நாள்கள் முன்னதாகச் செல்ல வேண்டும். அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். அதற்காக பெருந்தொகை செலவழிக்க வேண்டும்.
இதனால், மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தோ்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தோ்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்து விட்டு, மாணவா்கள் விருப்பம் தெரிவித்துள்ள 4 தோ்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.