
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமயமாதா பெருவிழா சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயமானது, இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயமாகும். இப்பேராலய 442ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத்திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருபலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
இதில் உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் தூத்துக்குடி மட்டுமில்லாமல் தென் மாவட்டம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான திருப்பலி நடைபெற்றது.
பெருவிழா நிறைவுத் திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி மாலையில் நடைபெறுகிறது. மாநகர வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவபவனி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இத்திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கான பாதுகாப்பு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.