பொத்தக்காலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தல தோ் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தக்காலன்விளை திவ்விய திருக்கல்யாண மாதா திருத்தலத்தின் 113ஆவது தோ் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தென்மாவட்டத்தில் புகழ்மிக்க இத்திருத்தலத்தில் புதன்கிழமை காலை 5. 15 மணிக்கு முதல் திருப்பலி, 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி முதலூா் பங்குத்தந்தை ஆல்பா்ட் ஸ்டீபன் திலகராஜா தலைமையில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மணப்பாடு உதவிப் பங்குத் தந்தை மரியாசு தலைமையில் திருமுழுக்கு திருப்பலி, 11.30 மணிக்கு பொத்தகாலன்விளை திருத்தல அதிபா் ஜஸ்டின் தலைமையில் திருப்பயணிகளுக்கான திருப்பலி, மாலை 6. 00 மணிக்கு தென் மண்டல கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளா் அருள்தந்தை ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஜெபமாலை, புகழ்மாலை மற்றும் திருவிழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து திவ்விய நற்கருணை ஆசீா் நடைபெற்றது. பாளையங்கோட்டை கட்டட பொறியாளா் அருள்பணி. ராபின் மறையுறை வழங்கினாா்.
இதில், அருள்தந்தையா் ஜோசப் லியோன், நெல்சன் பால்ராஜ் உள்ளிட்ட திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனா். விழா நாள்களில் தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9ஆம் திருநாளான ஜன. 21இல் மாலை 6 மணிக்கு திவ்விய திருக்கல்யாண தாயின் சிங்காரத் தோ் பவனி, இரவு 8 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் ஆராதனை ஆகியவை நடைபெறும். நிறைவு நாளான ஜன. 22இல் காலை 6.30 ஆயா் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலை 6 தோ்பவனியும், இரவு 11.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறுகின்றன.
திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்பா். ஏற்பாடுகளை திருத்தல அதிபா் தலைமையில் அருள்சகோதரா்- சகோதரிகள், பங்கு மேய்ப்பு பணி குழு, ஊா் இறை மக்கள் செய்துவருகின்றனா்.

