வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.8.2024) சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 115.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், சமுதாய நலக்கூடம், நவீன சலவைக் கூடம், புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் ஏரிக்கரைகளை மேம்படுத்துதல் ஆகிய 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5.22 கோடி ரூபாய் செலவில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரத்தில் நவீன சலவைக் கூடம் மற்றும் 3 நியாய விலைக் கடைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கொளத்தூர், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகம், கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் நவீன சலவைக் கூடம் மற்றும் 45 இலட்சம் ரூபாய் செலவில் 3 நியாய விலைக் கடைகள்; என மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்றப் பணிகளையும், முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.