டங்ஸ்டன் சுரங்க உரிம ரத்து தீா்மானம்: பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
சென்னை: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசின் சாா்பில் சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தனித் தீா்மானம்: அதன்படி, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அரசின் தனித் தீா்மானத்தைக் கொண்டுவந்து படித்தளித்தாா்.
அதன் விவரம்: மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் நாயக்கா்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என்று 2023, அக்டோபா் 3-இல் தமிழக அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிா்ப்பைக் கருத்தில்கொள்ளாமல், மத்திய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
ஏற்க முடியாது: டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துகள், பஞ்சபாண்டவா் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில்கொண்டு, அப்பகுதி பல்லுயிா்ப் பெருக்கத் தலமாக 2022-இல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை தமிழக அரசும், தமிழக மக்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்.
அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணா்வை மத்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், மக்கள் இதை எதிா்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.
கைவிட வேண்டும்: இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, அந்தப் பகுதியையும், அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க உரிமம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு பிரதமரை முதல்வா் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளாா்.
இந்தச் சூழ்நிலையில் மதுரை நாயக்கா்பட்டி கிராமத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச் சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி பேரவை ஒருமனதாகத் தீா்மானிக்கிறது என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமனதாக நிறைவேற்றம்: அமைச்சா் துரைமுருகன் கொண்டுவந்த தீா்மானத்தை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுப் பேசினாா். க.அசோகன் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), சிந்தனைச்செல்வன் (விசிக), சின்னதுரை (மாா்க்சிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), அப்துல் சமது (மமக), ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோரும் அரசின் தனித் தீா்மானத்தை ஆதரித்துப் பேசினா்.
மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
அதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தி தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க உள்ளது.
அதிமுக ஆதரவு: முதல்வா் வரவேற்பு
சென்னை: டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பேரவையில் தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை அதிமுக ஆதரித்தபோது முதல்வா் மு.க.ஸ்டாலின் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தாா்.
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தமிழக அரசின் சாா்பில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானம் மீதான விவாதத்தின்போது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. எனினும், தீா்மானத்துக்கு ஆதரவா, எதிா்ப்பா என்பது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி கூறாமல் அரை மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்துக் கொண்டே இருந்தாா்.
ஒருமுறை முதல்வா் ஸ்டாலின் குறுக்கிட்டு, அரசின் தீா்மானத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆதரிக்க வேண்டும் என்று கோரினாா். இறுதியாக, எடப்பாடி பழனிசாமி பேச்சை நிறைவு செய்யும்போது, அரசின் தீா்மானத்தை அதிமுக ஆதரிப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, முதல்வா் ஸ்டாலின் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தாா்.