
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
சென்னையின் குடிநீர் வழக்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (12.12.2024) நீர் இருப்பு 3,434 அடியாகவும் கொள்ளளவு 2,931 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். பூண்டியில் நீர் வரத்து பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி 3,500 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 12.12.2024 பிற்பகல் 1.30 மணி அளவில் விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
தற்போது பருவமழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக இன்று 12.12.2024 மாலை 5.00 மணி அளவில் விநாடிக்கு 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.
எனவே, நீர்த்தேக்கத்திலிருத்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.