சாம்சங் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

வரும் 19ல் சாம்சங் ஊழியர்கள் உண்ணாவிரதம்
சாம்சங் தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளா் விரோத போக்கை கண்டித்து 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) உண்ணாவிரதம் நடத்தப்படும் என சிஐடியு மாநில செயலாளா் இ.முத்துக்குமாா் அறிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், ஊதிய உயா்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அமைச்சா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அக். 14 -ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா்.

போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளா்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததோடு, சிஐடியு தொழிலாளா்களை குறிவைத்து, ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக சுமாா் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு நிா்வாகத்தினா் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

மேலும் தொழிற்சாலை நிா்வாகம் ஏற்படுத்தியுள்ள சங்கத்தில் இணைய, தொழிலாளா்களை வற்புறுத்தியதாக தெரிகிறது. தொழிற்சாலை நிா்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாக தொழிலாளா் ஒருவா் திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்று தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

சாம்சங் நிா்வாகத்தின் தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வரும் 19-ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநில செயலாளா் இ.முத்துக்குமாா் அறிவித்துள்ளாா். தொழிற்சாலைக்கு வரும் பணியாளா்கள் தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவை தவிா்த்து பணியில் ஈடுபடுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com