14 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிகவின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரேமலதா தலைமை வகித்தார். அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று மாவட்டச் செயலர்களிடம் பிரேமலதா தனித்தனியாக கருத்து கேட்டார் . இறுதியாகக் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரேமலதாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே மாவட்டச் செயலர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என தேமுதிகவுக்கு நான்கு வழிகள்தான் உள்ளன. 
இதில் எல்லோருடைய முடிவும் தனித்துப் போட்டியிடலாம் என்பதாகும்.
மற்ற மூன்று வழிகளில் எந்தக் கட்சி அதிக இடங்களை தேமுதிகவுக்கு அளிக்கிறதோ, அதாவது 2014 மக்களவைத் தேர்தலைப்போல், 14 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தருகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பதுதான் அனைத்து மாவட்டச் செயலர்களின் இறுதியான முடிவாக உள்ளது.
அதிமுகவுடனோ, பாஜகவுடனோ மறைமுகமாகவோ அதிகாரபூர்வமாகவோ இன்னும் கூட்டணி தொடர்பாகப் பேசவில்லை.
எப்போது முடிவு?: தேமுதிகவின் கொடி நாள் பிப். 12-ஆகும். அதை தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ளோம். அதன் பிறகு தேமுதிக சார்பில் 4 மண்டலங்களிலும் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் பெரிய கூட்டம் நடத்த உள்ளோம். அதற்குள் தேமுதிகவின் கூட்டணி முடிவு ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
அனைத்துக் கட்சிகளுமே தொகுதிகளுக்காகத்தான் கூட்டணி அமைக்கின்றன.  தேமுதிகவைவிட நல்ல கொள்கை கொண்ட கட்சி தமிழக அரசியலில் இல்லை. புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துகள் என்றார் அவர்.
2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. அதில் 14 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com