எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய ராசாவை வரும் மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி


அவிநாசி: எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய ராசாவை வரும் மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

மறைந்த அதிமுக நிறுவனர்  எம்.ஜி.ஆரை விமர்சித்த  நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து அவிநாசியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

மறைந்த அதிமுக நிறுவனர்  எம்.ஜி.ஆரை ஆ.ராசா  வேண்டுமேன்றே திட்டமிட்டு  மிக மோசமாக பேசி உள்ளார். அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர். அதிமுக மக்களிடத்தில் பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் பொறாமையால் தான், இன்றைக்கு தீய சக்தியை சேர்ந்தவர்கள் எம்ஜிஆரை விமர்சிக்கிறார்கள். 

நாவடக்கம் தேவை
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி. எம்ஜிஆரின் தொண்டர்கள் மனதால் காயம்பட்டுள்ளனர். ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. 

எதிரியையும் வாழ வைத்தவர்
கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்தது. எம்ஜிஆர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் எங்கள் தங்கம் படத்தில் சம்பளம் வாங்காமல், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடித்துக்கொடுத்தார்கள். அந்த படத்தின் மூலம் சம்பாதித்தது அந்த குடும்பம். கருணாநிதி, கடனில் இருந்து தப்பித்ததாக முரசொலி மாறனே கூறியதாக முரசொலியில் வந்துள்ளது. எம்ஜிஆர் எதிரியையும் வாழ வைத்தவர். 1967-ஆம் ஆண்டு எம்ஜிஆரால் திமுக ஆட்சிக்கு வந்தது. துரைமுருகனை வாழவைத்தவர் எம்ஜிஆர். 

காற்றிலும் ஊழல்
கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் ஆ.ராசா. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரிந்த கட்சி திமுக. ராசா உளறுவதை விட்டுவிட்டு, நாட்டுக்கு சேவை செய்த தேசியத் தலைவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்தில் தொடர்ந்து 30 ஆண்டு கால ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. அந்த காலகட்டத்தில் தமிழகம் முன்னேற்றம் கண்டது. உயர்கல்வியில் 2030-இல் அடைய வேண்டிய இலக்கை, நாம் நம்முடைய ஆட்சியிலேயே ஈட்டினோம். அதிகமான அரசு கல்லூரிகள், 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 சட்டக்கல்லூரிகள்,  வேளாண்மை, பொறியியல் என ஏராளமான கல்லூரிகளை திறந்து அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்த அரசாங்கம் அதிமுக. 

அத்திக்கடவு திட்டம்
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் 50 ஆண்டு காலம் போராடிய அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை அதிமுக நிறைவேற்றியது. மாநில அரசு நிதியில் இருந்து ரூ.1652 கோடி ஒதுக்கீடு செய்து, 90 சதவிகித பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக 10 சதவிகித பணிகளை 32 மாதங்களாக திமுக  அரசு முடக்கி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை கொண்டு வந்தோம். அதையும் ரத்து செய்தது திமுக அரசு. திருப்பூர், கோவை, அவிநாசி அத்தனை கூட்டுகுடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக. அதிமுக கொண்டுவந்த மேட்டுப்பாளையம் 4-ஆம் குடிநீர் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 10 ஆம் தேதி நாளை ஸ்டிக்கர் ஒட்டி திறக்க இருக்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பது திமுகவின் தற்போதைய வேலை. 3 மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கோவையில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டுவந்ததும் அதிமுக தான்.  

திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இன்றைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இன்றைக்கு திருப்பூர், கோவை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் திமுக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.  

தொழில் முதலீடு
அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில் நகரம் திருப்பூர்,தற்போது மோசமாகிவிட்டது. விலைவாசி 40 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. ஸ்பெயினுக்கு சென்ற முதல்வர் 11 நாள்கள் அங்கு தங்கியிருந்தார். ஒப்பந்தம் போடப்பட்ட 3 நிறுவனங்களும் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள். ஈரோடு, தூத்துக்குடி மற்றும் பெருந்துறை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஒரு நாடகம் போட்டுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை, தொழில் முதலீடு செய்ய சென்றிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். 

தாலிக்குதங்கம், விலையில்லா மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது திராவிட மாடல் அரசு. கோவை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்த அரசு அதிமுக. புயல், வறட்சி என இரண்டு நேரங்களில் நிவாரணம் வழங்கியது அதிமுக. குளம், குட்டை, ஏரி அனைத்தும் குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தது அதிமுக அரசாங்கம் தான். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. தென்னை விவசாயிகள் பாதிக்கபடும்போது, மத்திய அரசிடம் குரல் கொடுத்து நியாயமான விலையை பெற்றுத்தந்தோம். நியாவிலைக் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். 

சந்தி சிரிக்கிறது
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிறைவேறவில்லை. 3-இல் ஒரு பகுதி தான் உரிமைத்தொகை  வழங்கப்பட்டுள்ளது. 

டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்
வரும் மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா போட்டியிடுவார். எம்ஜிஆரை அவதூறாக பேசிய அவரை நாம் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழ்கத்தில் 39, பாண்டிச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றியை குவிக்க பாடுபடுவோம் என்று பழனிசாமி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆர் ஜி. அருண்குமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி வி. ஜெயராமன், ப.தனபால், கே. என். விஜயகுமார், ஏ.செல்வராஜ், எம்.  எஸ் .எம் .ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல்  கந்தசாமி, கே. ஏ.செங்கோட்டையன், மகேந்திரன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com