தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை: பிரதமர் நரேந்திர மோடி

பாஜகவின் தற்போதைய 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
3 min read

திருச்சி: பாஜகவின் தற்போதைய 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதன்மூலம் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தும், ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை வழங்கியும் பிரதமர் பேசியது: தமிழகத்தில் பலருக்கும் 2023-ஆம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. கனமழை காரணமாக சக குடிமக்கள் பலரை நாம் இழக்க வேண்டியிருந்தது. சொத்துகள், உடைமைகள் இழப்பும் கணிசமானவையாக இருந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்குத் துணையாக நிற்கிறது. சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு அளித்து வருகிறோம்.
பாரத நாட்டின் வளம் மற்றும் கலாசார மரபின் பிரதிபலிப்புதான் தமிழகம். தமிழ்மொழி மற்றும் ஞானம் என்ற பழைமையான கருவூலம் தமிழகத்தின் வசம் உள்ளது. எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறேனோ அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நிரப்பிச் செல்கிறேன்.
திருச்சி என்று சொன்னாலே வளமான வரலாற்றுக்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாகக் காணக் கிடைக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாசாரம் பற்றி வெகுவாகக் கற்க கூடிய வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.
உலகின் எந்த இடத்துக்கு நான் சென்றாலும்கூட தமிழகத்தைப் பற்றி பேசாமல், தமிழ் மொழியை மனதாரப் புகழாமல் இருக்க முடியவில்லை. தமிழக பாரம்பரியத்தில் இருந்து கிடைக்கும் கலாசார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும். காசி- தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் உள்ளிட்டவை அதற்கு வலு சேர்க்கின்றன.
தமிழகத்தின் வளர்ச்சி பாரதத்தின் வளர்ச்சி: "மேக் இன் இந்தியா' திட்டத்தின் சிறந்த அடையாளத் தூதராக தமிழகம் விளங்குகிறது. மாநிலத்தின் வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
தமிழகம் விரைவான வளர்ச்சியைப் பெறும் என்றால் பாரதத்தின் வளர்ச்சியும் விரிவடையும்.
திருச்சியில் திறக்கப்பட்டுள்ள புதிய முனையம், இணைப்புத் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும். கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுடனான இணைப்பை வலுப்படுத்தும். திருச்சி மட்டுமல்லாது அருகில் உள்ள நகரங்களிலும் மிகப்பெரிய முதலீடுகளும், புதிய வணிகத்துக்கான சந்தர்ப்பங்களும் உருவாகும். கல்வி, சுகாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் கூடுதலாக பலன் கிடைக்கும்.
தற்போதைய ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்கள் ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேசுவரம், வேலூர் போன்ற மகத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கின்றன. இவற்றால் சாமானியர்களுக்கு மட்டுமின்றி புனிதப் பயணங்களை மேற்கொள்வோருக்கும் நல்ல வசதிகள் கிடைக்கும்.
மீனவர்களுக்கு திட்டங்கள்: சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக மீன் வளத்துக்கென பிரத்யேகமான அமைச்சகத்தை ஏற்படுத்தி அதற்கென  நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக மீனவர்களுக்கு கடன் அட்டைகள், பற்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. 
மத்திய அரசின் பெரும் முயற்சியால் துறைமுகத் திறனிலும், கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து செல்லும் நேர அளவிலும் பெரிய மேம்பாடு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத நிதி: மாநிலங்களுக்கு வரலாறு காணாத நிதியை மத்திய அரசு அளித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பான 10 ஆண்டுகளில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் கோடி அளித்திருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு அளித்துள்ளோம்.
குறிப்பாக, தமிழகத்துக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டதைவிட இந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மூன்று மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இலவச ரேஷன் பொருள்கள், கான்கிரீட் வீடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி என தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளோம் என்றார் அவர்.
இந்த நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

தேசிய பேரிடர் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிதியை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சி விமான நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது புதிய முனையம் திறப்பு விழாவில், முதல்வர் பேசியது: திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்துவைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி.
திருச்சி விமான நிலையத்தை மேலும் விரிவாக்க ரூ.318.85 கோடியில் 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்த ரூ.3,118 கோடியில், 2,302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
தென் தமிழ்நாட்டில் ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் மக்கள் ஆன்மிகப் பயணமாகவும், சுற்றுலாவாகவும் வருகின்றனர். அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தின் சிறு, குறு நிறுவனங்கள்தான் பெல் பொதுத் துறை நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களை வழங்கிக் கொண்டிருந்தன. தற்போது, பெல் நிறுவனத்திடம் இருந்து கேட்பாணை மிகவும் குறைந்துவிட்டது. பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை வழங்க பிரதமர் ஆவன செய்ய வேண்டும்.
கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கடுமையான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அந்த மாவட்டங்களில் பொது உள்கட்டமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கின்றன. எனவே, அவற்றை கடுமையான இயற்கைப் பேரிடர்கள் என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
மாநிலத்திற்காக கோரிக்கை வைப்பதும் - மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அவை, அரசியல் முழக்கங்கள் அல்ல. தமிழக அரசின் கோரிக்கைகளை பிரதமர் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com