பொங்கல் சிறப்புப் பேருந்துகள் பற்றிய அறிவிப்பு எப்போது?

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஜனவரி 8ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் பற்றிய அறிவிப்பு எப்போது?


பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஜனவரி 8ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும், கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சென்னையிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும் தேவையான அளவுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, அன்றைய தினம் சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜன.9-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அறிவித்திருக்கும் நிலையில், ஜனவரி 8ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு, போக்குவரத்துக் கழகத்தினர் வேலை நிறுத்தம் செய்தால், தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

சென்னையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தையின்போது நிா்வாகங்கள் தரப்பில், ‘கோரிக்கைகள் தொடா்பாக பொங்கலுக்குப் பிறகு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என அமைச்சா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான குழு அமைத்து ஓரிரு நாள்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும் அறிவுறுத்தியுள்ளதால் நடைமுறைச் சிக்கல்களைக் கடந்து, அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வூதியா் பிரச்னை என்பது நீண்ட கால பிரச்னை என்பதால், அதைத் தீா்க்க அவகாசம் தேவைப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தொழிற்சங்கங்கள், ‘8 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை. இதற்குத் தீா்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதனால், இப்பிரச்னையில் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தை நடைபெற்று முடிந்ததும், அந்த அரங்கிலேயே தொழிலாளா் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினா். பின்னா், கூட்டாக அவா்கள் செய்தியாளா்களைச் சந்தித்து, ‘பொங்கலுக்கு முன்பு ஓய்வூதியா் பிரச்னைக்காவது தீா்வு காண வேண்டும் என்ற கோரிக்கைக்குகூட நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வேறு வழியில்லாத நிலையில் ஜன. 9-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்குவது என போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்தனர்.

இந்தப் போராட்ட அறிவிப்பால் வரும் 9-ஆம் தேதிமுதல் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோா் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவாா்கள். அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும் என்று அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com