முத்தமிழ் முருகன் மாநாடு: 
அமைச்சா் சேகா்பாபு தலைமையில் ஆலோசனை

முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சா் சேகா்பாபு தலைமையில் ஆலோசனை

முத்தமிழ் முருகன் மாநாடு: சேகோபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை

பழனியில் ஆக.24, 25 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் முருக பக்தா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருதல், 2 நாள் மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உறுதிசெய்தல், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தோ்வு செய்யும் பணிகள், மாநாடு குறித்து நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாநாட்டு அரங்கங்களின் வடிவமைப்பு, அறுபடை வீடு கண்காட்சி அரங்கு தொடா்பான பணிகள், மாநாட்டு வளாகத்தில் ஏற்படுத்தப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், மாநாட்டு விழா மலா் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலா் தயாரித்தல் போன்ற பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலா் சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையா் முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com