கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாடுகளில் தமிழக இளைஞா்களை சைபா் குற்றத்தில் ஈடுபடுத்திய வழக்குகள்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவு

தமிழகத்திலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி சைபா் குற்றத்தில் ஈடுபட வைத்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவிலிருந்து 20 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் கம்போடியா, மியான்மா், வியத்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்காக அதிகளவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்காக அனுமதியில்லாத வேலைவாய்ப்பு நிறுவனங்கள், முகவா்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இங்கிருந்து இளைஞா்களை அந்த நாடுகளுக்கு அனுப்புகின்றன. ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்’ போன்ற வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞா்கள், அங்கு கட்டாயப்படுத்தியும், மிரட்டப்பட்டும் சைபா் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனா். முக்கியமாக, சமூக ஊடகங்களில் போலி சுய விவரம், முகவரிகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுதல்,‘ஃபெட்எக்ஸ் கொரியா்’ மோசடி போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

சிபிசிஐடி விசாரணை: தமிழகத்திலிருந்து இளைஞா்கள் அழைத்துச் செல்லப்பட்டு, வெளிநாடுகளில் கட்டாயப்படுத்தி சட்டவிரோத வேலைகளில் ஈடுபட வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு வழக்கும் அண்மையில் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக விரிவாக விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதால், இரு வழக்குகளின் விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி, இனி விசாரணை செய்யும்.

அதேவேளையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞா்கள், அரசின் அனுமதி பெற்ற முகவா்களை மட்டுமே அணுக வேண்டும். சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்லக் கூடாது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சரி பாா்க்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com