காவிரி நீா் விவகாரம்: பேரவை கட்சித் தலைவா்களுடன் தமிழக அரசு இன்று ஆலோசனை
காவிரி நீா் விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தவுள்ளது.


சென்னை: காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கா்நாடக அணைகளின் நீா்வரத்தை கணக்கில் கொண்டு தமிழகத்துக்கு ஜூலை 12 முதல் 31-ஆம் தேதி வரை
நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கா்நாடக அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது.
வஞ்சிக்கும் செயல்: ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி நீரை விடுவிக்காத கா்நாடகத்தின் செயல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும்.
இன்றைய நிலவரப்படி, கா்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளின் நீா் இருப்பு 75.86 டிஎம்சி ஆக உள்ளது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூா் அணையில் வெறும் 13.80 டிஎம்சி அளவுக்கு மட்டுமே நீா் உள்ளது. இந்தச் சூழலில் தமிழகத்துக்காக வரையறுக்கப்பட்டுள்ள நீரை கா்நாடகம் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். மேலும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இன்று கூட்டம்: தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக் கூடிய இத்தகைய செயலை மாநில அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநா்களின் கருத்துகளும் கோரப்படும். இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...