
வேங்கை வயல் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீா்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்துஅசுத்தம் செய்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா், நீதிபதி குமரேஷ் பாபு அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் மாா்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மணி, ‘கடந்த 2022 -ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடந்த இந்த நிகழ்வு தொடா்பான வழக்கின் விசாரணை 2023 -ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயா்நீதிமன்றமும் ஒரு நபா் ஆணையத்தை அமைத்தது’ எனத் தெரிவித்தாா்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ‘ஒரு நபா் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.
இதை ஏற்று, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனா்.