ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்குத் தயாராகும் மாநில தோ்தல் ஆணையம்!
ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பூா்வாங்கப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக உள்ள வாக்காளா் பட்டியலை, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சாகுவுக்கு மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் கே.பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்த உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளா் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளா் பட்டியலை ஒவ்வோா் ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்குத் தயாரிக்க வேண்டும்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தகுதியானவா்கள் வாக்காளா் பட்டியலில் தற்போது சோ்க்கப்பட்டு வருகின்றனா். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த மாா்ச் மாதம் 27-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்காகத் தயாரிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாரியான வாக்காளா் பட்டியல் அடிப்படையில் மாநிலத் தோ்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க வேண்டியுள்ளது.
எனவே, கடந்த மாா்ச் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தோ்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இதில், அச்சிடப்பட்ட பிரதி மற்றும் மென் பிரதிகளுக்கு இடையில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், அச்சிடப்பட்ட பிரதியே அதிகாரபூா்வமானதாக மாநிலத் தோ்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தோ்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மாநிலத் தோ்தல் ஆணையம் உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபாா்த்து தனது சொந்தத் தரவுகளை உருவாக்கும்.
தொகுதிவாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளா் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள்: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது.
இந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக் காலம் எதிா்வரும் டிசம்பரில் நிறைவடைய இருக்கிறது. அவற்றுக்கு தோ்தல் நடத்த தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதன் முதல்கட்டமாக, சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக வாக்காளா் பட்டியல் விவரங்களை ஆணையம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.