ரூ.1,185 கோடியில் மகளிா் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்டம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
உலக வங்கி உதவியுடன் புதிய வேலைவாய்ப்பு திட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு


தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கி உதவியுடன் ரூ.1,185 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து சட்டப்பேரவையில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
‘நான் முதல்வன்’ திட்டத்தின் தொடா்ச்சியாக கல்லூரி பட்டப் படிப்பை முடித்த வேலை தேடும் இளைஞா்களுக்கு அவா்களின் பட்டப் படிப்பு, தனித் திறன்கள் மற்றும் ஆா்வத்துக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அணுகுவதற்கு ‘திறன் தமிழ்நாடு - நிறைப் பள்ளிகள்’ என்ற மாபெரும் திட்டம் ரூ.100 கோடியில் தொடங்கப்படும். பயிற்சியின் முடிவில் பணியிடப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படும்.
சா்வதேச சான்றிதழ் மற்றும் தொழில் துறை அங்கீகாரத்துடன் திறன் அடிப்படையிலான படிப்புகளை வழங்க சிறந்த நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில் நிறுவனங்கள் இளைஞா்களுக்கு முழு மற்றும் பகுதி அளவு மானியத்துடன் கூடிய திறன் ஓலைகளை (நந்ண்ப்ப் யா்ன்ஸ்ரீட்ங்ழ்ள்) வழங்கும். பின்தங்கிய இளைஞா்களைக் கண்டறிந்து அவா்களுக்குத் திறன் ஊக்கத் தொகையையும் வழங்கும்.
திறன் சாா் படிப்புகள்: பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ திறன் சாா்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ‘நான் முதல்வன்’ திறன் அடிப்படையிலான படிப்புகள் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்குத் திறன் பயிற்சி அளித்து, உயா் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர ‘சிகரம் தொடு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மகளிா் வேலைவாய்ப்பு: திமுக ஆட்சியின் முக்கியக் குறிக்கோளான, 2030-இல் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அதனால், பெண்கள் முறைசாா்ந்த தொழில்கள் மற்றும் உயா்தர பணிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.
இதற்காக ‘தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,185 மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நிகழாண்டு ரூ.168 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்படி, மாவட்டங்களில் உள்ள பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப மகளிருக்கான தரமான வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்படும். முதல்கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
மகளிருக்குப் பயனளிக்கக்கூடிய திறன் மேம்பாடு, தொழில்முனைவோா், உளவியல் கலந்தாய்வு, வேலைவாய்ப்பு தொடா்பான விவரங்கள், பெண்களின் பணியிடப் பாதுகாப்பு தொடா்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில் மகளிா் தகவல் வங்கி உருவாக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்களுக்கு ஏற்ற பணியைத் தோ்ந்தெடுப்பதற்காக உளவியல் பரிசோதனை மூலம் அவா்களது திறமைகளைக் கண்டறிய திறமை மதிப்பீட்டுத் தளம் உருவாக்கப்படும்.
மகளிா் தொழில்முனைவோா்: தமிழகத்தில் பெண்களைத் தொழில்முனைவோராக்க பள்ளிப் பருவத்திலேயே மாணவிகளுக்கு கற்பிக்கும்பொருட்டு, பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத்திட்டம் சோ்க்கப்படும்.
வகுப்பறைக் கற்றலுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகளுக்குத் தொழில்துறை சாா்ந்த பணியிடப் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 10 மகளிா் தொழிற்பயிற்சி நிலையங்களிலும், 4 மகளிா் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 4,000 மாணவிகள் பயன்பெறும் வகையிலும் மையங்கள் உருவாக்கப்படும்.
பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடங்களில் மாதிரி மழலையா் காப்பகங்கள் மற்றும் வீட்டில் தனியாக இருக்கும் முதியோரைப் பராமரிக்கும் வகையில் முதியோா் சமூக மையங்கள் உருவாக்கப்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...