ஏப்ரல் 2-ல் திருச்சி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம்

ஏப்ரல் 2-ல் திருச்சி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரம்

திருச்சி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் மதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஏப்ரல் 2-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த 29-ம் தேதி ஈரோடு மக்களைத் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்ட பிரசாரத்துக்கு வாக்காளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இது மாநிலம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், எதிரணியினருக்கு கலக்கத்தையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில், (ஏப்.2) திருச்சி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப். 2-ம் தேதி மாலை 4.30 மணியளவில் திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவை ஆதரித்தும், தீப்பெட்டிச் சின்னத்துக்கு வாக்கு கேட்டும் ரங்கம் ராஜகோபுரம் அருகில் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர், மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்தும், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டும் மண்ணச்சல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நெ.1 டோல்கேட் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் சங்குபேட்டை அருகில் மாலை 6.30 மணியளவிலும், துறையூர் பாலக்கரை பகுதியில் இரவு 7.30 மணியளவிலும் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

“இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க!” என்ற முழக்கத்துடன் தமிழகத்தில் பல்வேறு மக்களவைத் தொகுதிகளில் 5 கட்டங்களாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை விளக்கியும், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும், அவர்களது தோல்விகளை விளக்கியும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com