
வாழப்பாடி கோதுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், வறட்சி நிலவியது.
தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனதால், விவசாய பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இப்பகுதியில் இரு தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, திடீரென 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கோடை மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் கோதுமலை வனப்பகுதியில் கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள, 10 தடுப்பணைகளும் நிரம்பி வழிந்து, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.