
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு சாட்சியிடம்தான் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விரைவில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.
இதையடுத்து, அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலா் வெயில்முத்து உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா்.
தற்போது, இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.