பட்டாசு விபத்துகளில் பலியாகும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூர் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற அரசு விழாவில் அவர் ஆற்றிய உரையில், விருதுநகர்! இந்தப் பெயரை சொன்னவுடன் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நினைவுக்கு வருபவர், வீரத் தியாகி சங்கரலிங்கனார். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நம்முடைய தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று உயிர்த்தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார்.
இன்றைக்கு நாமெல்லாம் தமிழ்நாடு என்று பெருமையுடன் சொல்ல சங்கரலிங்கனாரும், அண்ணாவும் காரணம்.
இந்த விருதுநகர் மண் - பெருந்தலைவர் காமராஜரை நமக்கெல்லாம் வழங்கியது. காமராஜர் பெயரை சொன்னதுமே பலருக்கும் பல நினைவுகள் வரும். எனக்கு, என்னுடைய திருமணம் ஞாபகத்திற்கு வருகிறது… நினைத்துப் பார்க்கிறேன்… என்னுடைய திருமணத்துக்கு வரவேண்டும் என்று கருணாநிதி, காமராஜரை இல்லத்திற்குச் சென்று நேரில் அழைத்தார். அப்போது அவர் உடல் நலிவுற்று இருந்தார்! காமராஜர் வரவேண்டும், உடல் நலிவுற்று இருந்த அவர் மேடை ஏறவேண்டும் என்று அவருடைய கார் மேடை மேல் வரக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகளை கருணாநிதி செய்தார்!
காமராஜர் வந்தார்; என்னையும் – என் மனைவியையும் வாழ்த்தினார். இதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. காமராஜர் மறைந்த போது, ஒரு மகன் போல, அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர், நம்முடைய கருணாநிதி.
முதலில், நேற்று நான் ஒரு பட்டாசுத் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்த பணியாளர்களை சந்தித்தேன். அவர்கள் சில கோரிக்கைகள் வைத்தார்கள். அதன் அடிப்படையில், ஒரு முக்கியமான அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.
பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்!
இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின்கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இதற்கான முதற்கட்ட உதவியாக 5 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
அடுத்து, தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி உற்பத்தி மற்றும் அச்சுத் தொழில் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்தவரை, மழையையும், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது.
எனவே, இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கின்ற கண்மாய்களும், அணைக்கட்டுகளும், 17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றார்.